
ஆந்திரா மாநிலம் சகினேடிபள்ளி மண்டலத்தில் உள்ள கிராமத்தில் ஸ்ரீனு(43), கங்கா பவானி(35) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு தேவக்னா(6), மாதவ்(4) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஸ்ரீனு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் உத்திரபிரதேசம் மாநில பிரயாக்ராஜ் மாவட்டத்தில் நடைபெறும் குப்பமேளா நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் அவர்களை அழைத்துச் சென்றுள்ளார். அதன் பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஸ்ரீனுவின் தம்பி புல்லையா என்பவர் ஸ்ரீனு வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு ஸ்ரீனு எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் நாங்கள் கடன் தொல்லையால் குடும்பத்துடன் கும்பமேளா நடைபெறும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மாயமான குடும்பத்தை தேடி வந்தனர். தற்போது வரை அவர்களை பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.