தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் சமீபத்தில் தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். ஆனால் இன்று ஆர்த்தி தன்னுடைய ஒப்புதல் இல்லாமலேயே ஜெயம் ரவி விவாகரத்து முடிவை அறிவித்துவிட்டதாக பரபரப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ஜெயம் ரவி விவாகரத்து தொடர்பாக சொந்த விருப்பத்தை சார்ந்த அவராகவே முடிவெடுத்துள்ளார். என்னுடைய கவனத்திற்கு வராமல் என்னிடம் ஒப்புதல் பெறாமல் அவரே விவாகரத்து முடிவை அறிவித்துள்ளார் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அது அவராக எடுத்த முடிவே தவிர குடும்ப நலன் கருதி எடுத்த முடிவு கிடையாது.

நான் என் கணவர் ரவியுடன் மனம் விட்டு பேசுவதற்காக பலமுறை அவரை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால் அது நடக்கவில்லை. ஒரு தாயாக என்னுடைய குழந்தைகளின் நலனும் எதிர்காலமும் எனக்கு எப்போதும் முக்கியம். என்னுடைய நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் பொதுவெளியில் தாக்குதலுக்கு ஆளாகிறேன். ஆதாரமற்ற குற்ற சாட்டுகள் என் குழந்தைகளையும் காயப்படுத்துவதை  என்னால் ஏற்க முடியாது. இந்த கடினமான காலத்தை நாங்கள் கடக்கும் வரையில் எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். மேலும் மறுக்கப்பட்ட உண்மைகள் காலப்போக்கில் உண்மையாக மாறிவிடும் என்பதால் தான் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.