
ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானிர் நகரில் உள்ள ஜெய் நாராயண் வியாஸ் காலனியில் ராகுல் என்பவர் தனது மனைவி ருச்சி மற்றும் 7 வயது மகளுடன் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்திற்கு ஏற்பட்ட கடன் சுமை மற்றும் வங்கி அதிகாரிகளின் நெருக்கடியால் மனஉளைச்சலில் மாட்டிய இவர்களது உடல்கள் ஒரே அறையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. ராகுலின் 14 வயது மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
ராகுல் தனது மனைவியின் மருத்துவ செலவுகளுக்காக ரூ.60 லட்சம் வரை கடன் வாங்கியிருந்தார். அவர் தனது வீட்டையும் காரையும் விற்று கடனை திருப்பி செலுத்த முயற்சித்தும், முழுமையாக செலுத்த முடியாததால், வங்கிகள் மற்றும் கடன் கொடுத்தவர்களால் தொடர்ந்து நெருக்கடியில் வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இந்த நெருக்கடிகளை தாங்க முடியாத நிலை ஏற்பட்டதாலேயே அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளார்.
இந்த தற்கொலை விவகாரத்தில், ராகுலின் மகன் போலீசாரிடம் கொடுத்த தகவலின் அடிப்படையில், தற்கொலைக்கு முன்பு அவரின் தந்தை குடும்பத்தினர் அனைவருக்கும் மருந்து என எதனையோ கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த மனஉளைச்சல் நிறைந்த குடும்பத்தின் துயரமான முடிவு, கடன் நெருக்கடியால் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்களை வெளிப்படுத்துகிறது.