காஞ்சிபுரம் பகுதியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் பயிலும் பெரும்பாலான மாணவ மாணவிகள் மருத்துவமனையில் உள்ள விடுதிகளில் தங்கி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு மாணவி ஒருவர் அழுது கொண்டே ஐந்தாவது மாடிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் 5வது மாடியில் இருந்து கீழே குதிப்பதற்காக நின்று கொண்டிருந்தார். அவர் 5 வது மாடியின் விளிம்பில் நிற்பதை கண்ட சிலர் மருத்துவமனை நிர்வாகத்திற்கும், பாதுகாவலர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.

ஆனால் அதற்குள் அந்த மாணவி 5வது மாடியில் இருந்து கீழே குதித்து விட்டார். இதனால் பதட்டமடைந்த அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த அந்த மாணவியை சேர்ந்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அதன்படி தற்கொலை செய்து கொண்ட மாணவியின் பெயர் ஷெர்லி என்றும் அவர் எம்பிபிஎஸ் இறுதியாண்டு படித்து வருகிறார் என்றும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் 5வது மாடியில் இருந்து குதித்து மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.