
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து பிரதமர் நேரில் பேசி உள்ளார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்த பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் இந்தியாவிற்கு அதிக அளவில் ராணுவ தளவாடங்களை விற்பனை செய்ய உள்ளதாகவும், இந்தியாவிற்கு எப் 35 ரக ஜெட் விமானங்களை அமெரிக்கா வழங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இரண்டு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவு மற்ற நாடுகளை பாதிப்படைய செய்யக்கூடாது என சீனா கருத்து தெரிவித்துள்ளது.
இது குறித்து சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறுகையில் ஆசியா-பசுபிக் பிராந்தியம் புவிசார் அரசியல் போட்டிக்கான களம் அல்ல என்றும் மாறாக அமைதியான வளர்ச்சிக்கான மையம் என்றும் தெரிவித்துள்ளார். அதோடு இரண்டு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுகளும் ஒத்துழைப்பும் சீனாவிற்கோ அல்லது பிற நாடுகளின் நலனுக்கோ பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். இரு தரப்பு உறவு என்பது அமைதி மற்றும் செழிப்பை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் என சீனா நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.