சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு பத்ரி நாராயணன் என்பவர் vசித்து வருகிறார். சாப்ட்வேர் இன்ஜினியரான பத்ரி அமெரிக்காவில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் தனது தாய் மல்லிகாவை பார்ப்பதற்காக பத்ரி குடும்பத்துடன் சென்னைக்கு வந்துள்ளார். இந்நிலையில் ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுக்க சென்ற பத்ரி ரகசிய குறியீட்டு என்னை தவறாக பதிவு செய்ததாக தெரிகிறது. இதனால் அவரது ஏ.டி.எம் கார்டு பிளாக் செய்யப்பட்டது. சிறிது நேரத்தில் பத்ரியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய நபர் தன்னை வங்கி சேவை மைய அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அப்போது ஏ.டி.எம் கார்டு உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என கூறி பத்ரியின் ஏ.டி.எம் கார்டு விவரங்களை கேட்டார். ஏற்கனவே ஏ.டி.எம் கார்டு பிளாக் செய்யப்பட்டதால் அதனை உண்மை என்று நம்பிய பத்ரி தனது ஏ.டி.எம் கார்டின் விவரங்களை கூறியுள்ளார். இதனையடுத்து மர்ம நபர் கூறிய அறிவுரைப்படி, செல்போனுக்கு வந்த லிங்கை பயன்படுத்திய சிறிது நேரத்தில் பத்ரியின் வங்கி கணக்கிலிருந்து 3 தவணைகளாக 10 லட்ச ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பத்ரி வங்கிக்கு நேரில் சென்று விசாரித்தபோது அதுபோல யாரும் பேசவில்லை என கூறியுள்ளனர். இதுகுறித்து பத்ரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.