தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் பகுதியில் மனோ- பவித்ரா(23) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பி.எஸ்.சி கணிதம் படித்த பவித்ரா விமான நிலையத்தில் வேலை வாய்ப்பு இருப்பதாக வந்த விளம்பரத்தை பார்த்து அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய நபர் வாட்ஸப் மூலம் பவித்ராவின் படிப்பு தொடர்பான விபரங்களை பார்த்துள்ளார்.

இதனையடுத்து பவித்ராவை தொடர்பு கொண்ட வேறு ஒரு நபர் விமான நிலையத்தில் இளநிலை உதவியாளர் வேலைக்கு நீங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். அந்த வேலையில் சேர காப்பீடு, பதிவு கட்டணம் உள்ளிட்டவைகளுக்கு 63 ஆயிரத்து 400 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனை நம்பி அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு பவித்ரா பணத்தை செலுத்தியுள்ளார்.

அதன் பிறகு அந்த நபர் மீண்டும் பவித்ராவை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பவித்ரா தர்மபுரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பண மோசடி செய்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.