
திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் குடைபறைப்பட்டியில் சந்திரசேகர்(29) மற்றும் அசோக்குமார்(31) ஆகிய இருவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சகோதரர்கள் ஆவர். இதில் சந்திரசேகர் மீது 9 வழக்குகளும், அசோக்குமார் மீது 4 வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இவர்கள், கோர்ட்டில் ஜாமீன் பெற்று திருப்பூர் பகுதியில் தங்கியுள்ளனர். இந்நிலையில் வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று கூறியதால் சந்திரசேகர், அசோக்குமார் மற்றும் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த சிறுவனாகிய 3 பேரும் இரு சக்கர வாகனத்தில் திண்டுக்கல் சென்றனர்.
அப்போது இவர்களுக்கு பின்னால் வந்த காரில் கொலை செய்யப்பட்ட நாகராஜ் என்பவரின் மகன் மற்றும் 5 பேர் இருந்துள்ளனர். அவர்கள் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதினர். இதில் கீழே விழுந்த அவர்கள் அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் அவர்கள் மூவரையும் மீட்டனர். இதையடுத்து காரில் வந்தவர்கள் அங்கிருந்து தலைமறைவான நிலையில், இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து நேற்று நாகராஜ், செல்வகுமார், நிதீஷ் குமார், அருண்குமார், பாரத் பாண்டியன் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.