
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஒரு சீன உணவக உரிமையாளர், தந்தையின் உடலை வீட்டின் அலமாரியில் இரண்டாண்டுகளாக மறைத்து வைத்திருந்த அதிர்ச்சியான சம்பவம் வெளியாகியுள்ளது. 56 வயதான நொபுஹிகோ சுஸூகி என்பவர், 2023ஆம் ஆண்டு ஜனவரியில் தந்தை இறந்ததை கண்டுபிடித்த பின்னரும், அச்செய்தியை அதிகாரிகளிடம் தெரிவிக்கவில்லை. தந்தையின் இறுதிச்சடங்கு செலவுகள் மிகவும் அதிகம் என்பதால் தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில், அவரது சீன உணவகம் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டிருப்பதை எண்ணி சந்தேகித்த அண்டை வீட்டுக்காரர்கள், அதிகாரிகளிடம் புகார் செய்தனர். போலீசார் சுஸூகியின் வீட்டில் சோதனை நடத்தியபோது, அலமாரிக்குள் தந்தையின் எலும்புக்கூடு இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து, நொபுஹிகோ சுஸூகி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தந்தையின் இறப்பை மறைத்து, தொடர்ந்து அவரின் ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டதாகவும், தற்போது அதன் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
அந்த நபரின் தந்தை எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பாக இன்னும் எந்த உறுதி செய்யப்பட்ட தகவலும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். கொரோனா காலத்துக்குப் பிறகு, ஜப்பானில் இறுதிச்சடங்கு செலவுகள் குறைந்து சுமார் 1.3 மில்லியன் யென் (இந்திய மதிப்பில் ₹7.73 லட்சம்) ஆகக் குறைந்துள்ளதாக ஒரு சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. தற்போது 60 சதவீதம் மக்கள் ஒரு மில்லியன் யென்னிற்கும் (₹6 லட்சம்) குறைவாகவே செலவழிக்க நினைப்பதாக கூறப்பட்டுள்ளது.