சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஞானசேகரன் என்பவர் மிரட்டி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல் துறையினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஞானசேகரன் என்பவரை கைது செய்தனர். அப்போது அவர் தப்பி ஓட முயன்ற போது, தடுக்கி கீழே விழுந்து அவரது காலில் மாவு கட்டு போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, இந்த சம்பவம் நெஞ்சை பதற வைக்கிறது. இந்த நபர் நீண்ட காலமாக பல மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தி வரும் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த குற்றவாளிக்கு உடனடியாக கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பெண்களுக்கு எதிராக எந்த வகை குற்றமாக இருப்பினும் அதைப் பொறுத்துக் கொண்டு இருக்காமல் துணிச்சலுடன் வெளிவந்து கூற வேண்டும். அதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தி தருவதும், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதும் நாம் ஒவ்வொருவரையும் கடமையாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.