மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 7 மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை கருணை கொலை செய்யுமாறு கூறி தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டமானது நடைபெறும். இந்நிலையில் மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், சீர்காழி பகுதிக்கு அருகில் உள்ள ஓர் மீனவை கிராமத்தில் வசித்து வரும் ஏழு மீனவ குடும்பங்கள் தங்களை கருணை கொலை செய்யுமாறு மனு ஒன்றை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளனர். அதில்,

நாங்கள் சமீபத்தில் எங்களுக்கு பிடித்தமான மதம் ஒன்றுக்கு  விரும்பி மாறியதாகவும், அதை பிடிக்காத கிராம மக்கள் சிலர் தங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து துன்புறுத்தி வருவதால், எங்களது வாழ்வாதாரம் மிகவும் மோசமான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாழ முடியாத சூழ்நிலை என்பது ஏற்பட்டுள்ளது. 

மாவட்ட ஆட்சியர் பிரச்சனை ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து மீண்டும் பழைய சூழலை கிராமத்தில் உருவாக்க வேண்டும் அல்லது தங்களை கருணை கொலை செய்திட வேண்டும் என கண்ணீர் மல்க புகார் அளிக்கவே, உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.