நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதனை தேசிய தேர்வுகள் முகமை கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வருகிறது. இதில் ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த 2025-26 ஆம் கல்வியாண்டிற்கான நீட் தேர்வு வருகிற மே 4-ம் தேதி நடைபெற உள்ளது.

நீட் தேர்வில் கடந்த ஆண்டு ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் கேள்வி தாள்கள் முன்கூட்டியே கசிந்து மிகப்பெரிய முறைகேடுகள் நடந்தது. இதன் காரணமாக தேசிய தேர்வு முகமை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இத்தேர்வு குறித்து சந்தேகத்துக்கு இடமான வகையில் நடைபெறும் மோசடிகள் குறித்து புகார் அளிக்க ஒரு புதிய தளத்தை தேசிய தேர்வு முகமை அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் போலியான வாக்குறுதிகளை கொடுத்து இத்தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களிடம் மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை எச்சரித்துள்ளது. இது குறித்து தேசிய தேர்வு முகமை இயக்குனர் பிரதீப் சிங் கரோலா கூறியதாவது, இத்தேர்வுவின் வினாத்தாள்கள் கிடைக்கும் என்ற அறிவுப்புடன் வரும் அதிகாரப்பூர்வமற்ற இணையதளங்கள், சமூக வலைதளங்கள், தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் என்ற பெயரில் ஏமாற்றும் நபர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் புகார்களை தெரிவிக்கலாம்.

தேர்வர்கள் தாங்கள் கண்டறிந்த விஷயங்களைப் பற்றி குறிப்பிட வேண்டும். எங்கே எப்போதும் மோசடி நடைபெற்றது என்பதையும், அதற்கான உரிய ஆதாரங்களையும் பதிவேற்றம் செய்தும் மாணவர்கள் அனுப்பலாம். இப்படி மோசடியில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதனை நீங்கள் NEET.NTA.AC.IN அல்லது NTA.AC.IN என்ற இணையதளங்களின் வாயிலாக புகார்களை அளிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை  அறிவுறுத்தியுள்ளது.