இன்றைய காலகட்டத்தில் டிஜிட்டல் கைது என்ற பெயரில் தொடர்ந்து மோசடி நடந்து வரும் நிலையில் அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
டிஜிட்டல் கைது என்பது தற்போது மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் வாயிலாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதில் சிபிஐ அல்லது சுங்கத்துறை அதிகாரிகள் போல பேசி உங்கள் பெயரில் வந்த பார்சல் ஒன்று எங்களிடம் இருக்கிறது. அதில் போதை பொருள்கள் இருப்பதால் உங்களை நாங்கள் டிஜிட்டல் கைது செய்யப் போகிறோம் என்று கூறி பணத்தை பறிக்க முயற்சி செய்கின்றனர்.

அந்த வகையில் மீண்டும் ஒரு மோசடி அரங்கேறி உள்ளது. அதாவது சென்னை திருவல்லிக்கேணியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 3ம் தேதி செல்போன் மூலம் ஒரு அழைப்பு வந்தது. அப்போது தொடர்பு கொண்ட ஒருவர் டிஜிட்டல் அரஸ்ட் செய்வதாக கூறி 1 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பாக காவல்துறையில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.