
பிகார் மாநிலத்தில் உள்ள மேற்கு சாம்பரன் மாவட்டத்தில் ஜான் சுராஜ் கட்சித் தலைவர்,அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். இதில் அவர் கூறியதாவது, பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் ஆட்சி மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. அவர் உடல் அளவில் மற்றும் மனதளவில் மிகவும் களைத்து போய்விட்டார். அவரது மந்திரிகளின் பெயரைக் கூட அவரால் யார் உதவியும் இன்றி கூற முடியாது.
இதனால்தான் பாரதிய ஜனதா முதல் மந்திரி வேட்பாளராக அறிவிக்க தயங்கி வருகிறது. பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் நேரடியாகவே சவால் விடுகிறேன். நிதீஷ் குமாரை முதல் மந்திரி வேட்பாளராக அறிவிக்க முடியுமா?. பாரதிய ஜனதா கூட்டணியில் நிதிஷ்குமார் இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார்.
ஆனால் தேர்தலுக்குப் பின் பதவியை எதிர்பார்த்து நிச்சயமாக அணி மாறுவார். அவர் எந்த கூட்டணியில் இணைந்தாலும் முதல் மந்திரி பதவி கிடைப்பதற்கு அவருக்கு தொகுதிகள் இருக்காது. வரும் தேர்தலில் நிதிஷ் குமாரை தவிர யார் வேண்டுமானாலும் முதல் மந்திரி ஆகலாம் என்பதை உறுதியாக எழுதி தருகிறேன். நான் சொல்வது நடக்காவிட்டால் அரசியல் பிரச்சாரம் செய்வதையே விட்டு விடுகிறேன் என சவால் விடுத்துள்ளார்.