சென்னை கொசப்பேட்டையில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைத்தீர் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் சென்னை திருமங்கலத்தில் உள்ள வி ஆர் மாலில் கடந்த 26 ஆம் தேதி அன்று என்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்தினேன். ஒரு மணி நேரம் 57 நிமிடங்கள் வாகனத்தை நிறுத்தியதற்காக ரூ.80 பார்க்கிங் கட்டணமாக பெற்றனர். தமிழ்நாடு ஒருங்கிணைத்த கட்டிட விதிகளின்படி வணிக வளாகங்களில் போதுமான வாகன நிறுத்துமிடம் இருக்க வேண்டும்.

இதற்காக தனி கட்டணம் வசூலிக்க முடியாது. ஆனால் என்னிடம் பார்க்கிங் கட்டணம் வசூலித்தது நியாயமற்றது. எனவே இழப்பீடு ஆக ஒரு லட்சமும், வழக்கு செலவுக்காக 50000 வழங்க விஆர் மால் உரிமையாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் விசாரித்தனர். அப்போது வி ஆர் மால் சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு ஒருங்கிணைத்த கட்டிட விதி வணிக வளாகங்களில் வாகனம் நிறுத்தும் இடம் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினாலும், அங்கு இலவசமாக நிறுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

தற்போது உள்ள சட்டத்தின்படி பார்க்கிங் கட்டணம் வசூலிக்க எந்த தடையும் கிடையாது என்று கூறப்பட்டிருந்தது. அப்போது வணிக வளாகங்களில் கழிப்பறை, லிப்ட் போன்ற அடிப்படை வசதிகள் என்ற வரிசையில் உள்ள போது வாகன நிறுத்தும் இடமும் அடிப்படை வசதி என்ற பட்டியலில் வருமா? என்ற கேள்வி உள்ளது. சட்டபூர்வமான ஒழுங்குபடுத்தப்பட்டால் மட்டுமே வாகன கட்டணம் வசூலிக்க முடியுமா? என்ற கேள்வியும் உள்ளது. இதற்கு தமிழ்நாடு கட்டிட விதிகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் மட்டுமே விடை காண முடியும். ஆனால் அதற்கு இந்த ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. இதனால் அதில் தலையிட முடியாது.

அதேவேலை பார்க்கிங் கட்டணம் வசூலிக்கலாம் என்ற விதிகள் எதையும் வணிக வளாகம் நிர்வாகம் தாக்கல் செய்யவில்லை. இதன் மூலம் மனுதாரரிடம் கட்டணம் வசூலித்தது நியாயமற்றது. ஆதலால் வி ஆர் மால் தங்களது வாடிக்கையாளரிடம் இருந்து வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்க கூடாது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். இதனால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக வி ஆர் மால் உரிமையாளர் இழப்பீடாக ரூ.10000-மும், வழக்கு செலவுக்காக 2000-மும் பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவையில் கூறப்பட்டுள்ளது.