
மூகசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட தான்யாவின் தாயாருக்கு புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கான சாவி மற்றும் அனுசுயாவிற்கு தானியங்கி சக்கர நாற்காலியையும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சௌபாக்கியா மற்றும் ஸ்டீபன் ஆகியோரின் மகளான தான்யா முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு குறுஞ்செய்தி மூலம் தன்னிலை குறித்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிறுமி தான்யாவின் உடல்நிலை கருதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறுவை சிகிச்சை செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டார். அதன்பின் அவரின் பெற்றோருக்கு இலவச வீட்டுமனை வழங்கி அரசின் மூலம் வீடு கட்டி தர உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து பாக்கம் கிராமத்தில் 3 சென்ட் வீட்டு மனை அரசு சார்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த வீட்டுக்கான சாவியை இன்று முதலமைச்சர் சௌபாக்கியாவிடம் வழங்கினார். தங்களுக்கு மறுவாழ்வு அளித்து இலவச வீடு வழங்கிய முதலமைச்சருக்கு சிறுமி தான்யா மற்றும் அவரது பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அனுசுயா என்ற மாற்றுத்திறனாளிக்கு தானியங்கி சக்கர நாற்காலி வழங்கிட வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி அவருக்கு தானியங்கி சக்கர நாற்காலியை வழங்கப்பட்டது. இதைப் பெற்றுக் கொண்ட அவர் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வில் துணை முதலமைச்சர், அமைச்சர் எஸ்.எம் நாசர், நா.முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர் என்று தெரிவித்துள்ளார்.