
இந்திய கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் எப்போதும் இருந்து வந்தாலும், தற்போது பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தான் இந்திய அணியின் மிகவும் மதிப்புமிக்க வீரர் என முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.
37 வயதான அனுபவ வீரர் அஸ்வின், இந்திய அணியின் தற்போதைய சிறந்த வீரர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்தபோது, விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற பேட்ஸ்மேன்களைத் தவிர்த்து பும்ராவைத் தேர்ந்தெடுத்தார். அவர் கூறுகையில், “இந்தியாவில் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஆனால் தற்போது பும்ரா போன்ற ஒரு சிறந்த பந்துவீச்சாளர் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பும்ரா நம் காலத்தில் கிடைத்த மிகச் சிறந்த பந்துவீச்சாளர். அவரை நாம் அதிகம் கொண்டாட வேண்டும்.” என்றார்.

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை வந்த பும்ராவை ஒரு நிகழ்ச்சியில் விருந்தினராக அழைத்திருந்தனர். அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்தை கொண்டாடியது போல் பும்ராவை ரசிகர்கள் கொண்டாடினர். இது பற்றி பேசிய அஸ்வின், சென்னை ரசிகர்கள் எப்போதும் பந்துவீச்சாளர்களை அதிகம் விரும்புவார்கள் என்றும், பும்ரா ஒரு சாம்பியன் வீரர் என்பதையும் வலியுறுத்தினார்.