
சென்னையில் உள்ள பகுதியில் அதிமுக வழக்கறிஞர் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்தப் புகாரில் கூறியிருந்ததாவது, கடந்த 22ம் தேதி யாத்திரிகன் மீடியா என்ற யூடியூப் சேனலில் ஒரு வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவின் தலைப்பாக “அதிமுகவில் ஒருத்தன் கூட உயிரோட இருக்க மாட்டீர்கள், அருவாளோடு விஜய் ரசிகர்கள், வீடியோ படு வைரல்” என்று இருந்தது. அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள 2 நபர்களும் அரிவாளுடன், அதிமுக தொண்டர்களையும், பாராளுமன்ற உறுப்பினர் சிவி சண்முகம் என்பவரையும் திட்டி, தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த வீடியோவை முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படத்துடன் இணைத்து வடசென்னை படத்தின் பாடலுடன் எடிட் செய்து வெளியிட்டுள்ளன. இந்த வீடியோ பல வருடங்களுக்கு முன்பே வெளியானது என்றும், ஆனால் தற்போது யாத்திரிகன் மீடியா என்ற யூடியூப் சேனல் இரு பிரிவினர்கள் இடையே வன்முறையை தூண்டும் வகையிலும், அமைதியை விளைவிக்க வேண்டும் என்ற தீய நோக்கத்துடன் வீடியோவை எடிட் செய்து தற்போது பேஸ்புக், யூடியூப், வாட்ஸ் அப், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளன. இதனால் நடக்க இருக்கும் வன்முறையை தடுக்க வேண்டும், யாத்திரிகன் மீடியா யூடியூப் சேனல் அந்த வீடியோவை நீக்க வேண்டும் என்றும், குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக வழக்கறிஞர் வலியுறுத்தியுள்ளார்.