ஈரோடு மாவட்டத்தில் உள்ள அவல்பூந்துறை அருகே உள்ள  எரப்பம்பாளையத்தில் வசித்து வருபவர் தங்கவேல். இவரது மனைவி இந்திரா (62). இவர்கள் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றனர். வழக்கம் போல கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி மாலை மளிகை கடையில் இந்திரா  வியாபாரம் செய்துள்ளார்.

அப்போது பைக்கில் வந்த இளைஞர்கள் இந்திராவிடம் சிகரெட் கேட்டுள்ளனர். அதனை எடுக்க இந்திரா கடையின் உள் சென்றபோது பின்னிருந்து கல்லால் அவரது தலையில் அந்த நபர்கள் தாக்கியுள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்த இந்திராவின் கழுத்தில் இருந்த ஐந்து பவுன் தங்க தாலி செயினை பறித்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.இதனை அடுத்து  படுகாயம் அடைந்த இந்திரா ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து  அறிந்த அரசலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தை சேர்ந்த நவநீதன் மற்றும் ஈரோடு ஆர்.என். புதுரை சேர்ந்த கலைச்செல்வன் ஆகியோர்  திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு  அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.