
மதுரை மாவட்டம் செல்லூர் என்ற பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவர் போதையில் இருந்துள்ளார். இவர் நள்ளிரவில் பொக்லைன் வாகனத்தை கண்முடித்தனமாக இயக்கி சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள், ஆட்டோக்கள், பைக்குகள் உள்ளிட்டவற்றின் மீது வேகமாக மோதினார். இது தொடர்பான வீடியோ வெளியாக்கியுள்ளன. இவர் சுமார் அரை கிலோமீட்டர் வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை இடித்து நொறுக்கினார். அதோடு இரும்பு கடை ஒன்றில் தூங்கிக் கொண்டிருந்த காவலாளி நல்வாய்ப்பாக நூலிலையில் உயிர் தப்பினார்.
இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் அச்சிறுவனை நிறுத்த முயற்சி செய்தபோதும் பொக்லைனை இயக்கியவாறே சென்ற அவர் ஆட்டோ மீது மோதி வாகனத்தை நிறுத்தினார். இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் வாகனங்கள் சேதம் அடைந்ததால் பாதிக்கப்பட்ட உரிமையாளர்கள் அவற்றை சரி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.