
ஆதார் சட்ட விதிமுறைகளில் சில திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. அதாவது இந்த திருத்தமானது ஆதார் விபரங்களை தனியார் நிறுவனங்களும் பயன்படுத்தும் வகையில் உள்ளது. இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் கூறியதாவது, 2026ம் ஆண்டின் ஆதார் சட்டம் படி, ஆதார் விவரங்கள் சரிபார்ப்பு விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இனி அரசு மட்டுமின்றி தனியார் நிறுவனங்கள் வழங்கும் வர்த்தகம், பயணம், சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை பொதுமக்கள் தடையின்றி சுலபமாக பெற முடியும்.
இந்த திருத்தமானது பொது நலம் கருதி பல்வேறு சேவைகளை வழங்குவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆதார் விவரங்களை, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்த முடியும். இந்த விவரங்களை பயன்படுத்த விரும்பும் தனியார் நிறுவனங்கள், அதற்கான தேவை என்ன என்பதை குறித்த விவரங்களுடன் மத்திய மற்றும் மாநில அரசின் சம்பந்தப்பட்ட அமைச்சகம் அல்லது துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும். இதனை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆராயும். அதன் பின் அதன் பரிந்துரையின் அடிப்படையில் அதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பு அமைச்சகம் ஒப்புதல் அளிக்கும். அதன் பின்னர் தனியார் நிறுவனங்கள் அதனை பயன்படுத்த அனுமதிக்கப்படும்.