கேரளா மாநிலம் கொல்லத்தில் சஜு ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏரூர் சௌமியா பவனில் பாம்புகளை பராமரித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளன. இவர் ஏரூர் பகுதியில் இருக்கும் வீடுகளில் பாம்பு நுழைந்தால் அதைப் பிடித்து பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விடுவது தான் அவருடைய வேலை. இந்நிலையில் கடந்த டிசம்பர் 29ம் தேதி அன்று ஏரூர் தேகேவயல் காலணி அருகே ஒரு வீட்டிற்குள் பாம்பு ஒன்று நுழைந்துள்ளது. இந்த பாம்பு அந்த வீட்டில் இருந்த ஒருவரை கடித்துள்ளது. இதனால் பயந்து போன வீட்டின் உரிமையாளர் உடனடியாக சஜூவை தொடர்பு கொண்டு உள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சஜு வீட்டிற்குள் நுழைந்து பாம்பை தேடினார். ஆனால் அவருக்கு பாம்பு கிடைக்கவில்லை. உடனே அருகில் இருந்த புதரில் இருக்குமோ என்ற எண்ணத்தில் அதனை சுத்தம் செய்துள்ளார். அப்போது நாகப்பாம்பு இருப்பதை கண்டுபிடித்து, அதையடுத்து உரிமையாளரிடம் காட்டினார். அப்போது எதிர்பாராத விதமாக அவரை பாம்பு கடித்தது. இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்துள்ளது. இதன் இடையே டிசம்பர் 31ம் தேதி அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.