
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். இவருக்கு லோகேஷ்(24) என்ற மூத்த மகனும், விக்ரம்(23),சூர்யா(23) என்ற இரட்டை சகோதரர்களும் இருந்துள்ளனர். இந்த நிலையில் அண்ணன், தம்பிகள் மூவரும் நேற்று மாலை நேரத்தில் பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது லோகேஷ் எதிர்பாராத விதமாக கால் தவறி கால்வாயில் விழுந்துள்ளார். இதனால் செய்வது அறியாது திகைத்து நின்ற மற்ற இரட்டை சகோதரர்களும், அண்ணனை காப்பாற்ற பக்கிங்காம் கால்வாய்க்குள் குதித்துள்ளனர். கால்வாயில் தண்ணீர் அதிகரிப்பால் மூவருமே அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த மரக்காணம் காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் விரைவாக சென்று கால்வாயில் தவறி விழுந்த அண்ணன், தம்பிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நீண்ட நேர தேடலுக்குப் பின் லோகேஷின் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் லோகேஷி உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இரட்டை சகோதரர்களின் உடல்களை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.