டால்பின்கள் ஒரு கடல் வாழ் பாலூட்டி உயிரினமாகும். ஒவ்வொரு டால்ஃபின்களும் தனித்தனியான ஓசைகளை எழுப்பும். இது மனிதனின் கைரேகை எவ்வாறு தனித்தன்மை வாய்ந்ததோ அதே மாதிரி டால்ஃபின்களின் ஓசைகளும் தனித்தன்மை வாய்ந்தது. டால்ஃபின்கள் மனிதர்களுடன் மிகவும் நெருங்கி பழகக் கூடியவை ஆகும். பொதுவாக டால்ஃபின்கள் கூட்டம் கூட்டமாக தங்களது குடும்பத்துடன் வாழக்கூடிய உயிரினமாகும். டால்ஃபின்களை தனிமையாக பார்ப்பது அரிதானதாகும். இதேபோன்று ஐரோப்பா கண்டத்தில் உள்ள பால்டிக் கடலில் தனிமைப்படுத்தப்பட்ட டால்பின் ஒன்று உள்ளது.

இந்த டால்ஃபின்னின் பெயர் டெல்லே ஆகும். இது கடந்த சில ஆண்டுகளாக தனிமையில் வாழ்கிறது. இது பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்படுகிறது. சமீபத்தில் டெல்லேவை கவனித்த ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது, 17 வயதான டெல்லே கடலில் தனிமையாக உள்ளதால் வெவ்வேறு விதமான ஒலிகளை எழுப்புவதாகவும், தனிமையில் இருப்பதால் தனக்குத்தானே பேசிக் கொள்வதாகவும் கூறியுள்ளனர். டெல்லே  69 நாட்களில் 10000க்கும் மேற்பட்ட வெவ்வேறு விதமான ஒலிகளை எழுப்பியுள்ளது. டெல்லே தனிமையில் இருப்பதால் சமூகத் தொடர்புக்காக இவ்வாறு பல விதமான ஒலிகளை எழுப்பலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.