
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் ஹரி ஒரில் நகரில் உள்ள கடற்கரை தீவு அருகே சீ வேல்டு தீம் பார்க் என்னும் கேளிக்கை பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இங்கு கடற்கரை இருப்பதால் இந்த இடம் சுற்றுலா தளமாக விளங்குகிறது. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் இந்த இடத்திற்கு வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்கு தகுந்தாற்போல் கேளிக்கை பூங்கா நிர்வாகம் சார்பில் ஹெலிகாப்டர்களும் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று மதியம் ஹெலிகாப்டர் தளத்திலிருந்து ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட்டு சென்றது.
அதே சமயம் மற்றொரு ஹெலிகாப்டர் தரை இறங்குவதற்காக கீழே இறங்கிய போது எதிர்பாராத விதமாக இரண்டு ஹெலிகாப்டர்களும் நடுவானில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.