இந்தியாவில் உலக உறக்க தினம் (World Sleep Day 2025) முன்னிட்டு நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வின் படி, 59% பேர் தினமும் 6 மணி நேரத்திற்கும் குறைவாகவே தூங்குகின்றனர். அதே சமயம், அவர்களில் பாதி பேர் மட்டும் தான் வார இறுதியில் கூடுதல் நேரம் உறங்குவதன் மூலம் தங்களது உறக்கக் குறையை சரி செய்கிறார்கள். இந்த ஆய்வை LocalCircles நிறுவனம் நடத்தியதுடன், 40,000க்கும் மேற்பட்டோரிடம் கருத்து கேட்டது. இதில் 61% ஆண்களும், 39% பெண்களும் பங்கேற்றனர். ஆய்வு முடிவுகளின்படி, 39% பேர் 4 முதல் 6 மணி நேரம் மட்டுமே தூங்குவதாகவும், 20% பேர் அதற்கும் குறைவாக 4 மணி நேரம் மட்டுமே உறங்குவதாகவும் தெரியவந்துள்ளது.
72% பேர் உறக்கத்தின்போது கழிப்பறைக்குச் செல்லும் தேவை காரணமாக முழுமையான உறக்கத்திலிருந்து தடுக்கப்படுகின்றனர்.

இந்தியர்கள் குறைவாக உறங்குவதற்கான முக்கிய காரணங்களில் சில இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது 9% பேர் தங்கள் குழந்தைகள் அல்லது வாழ்க்கை துணையின் இடையூறுகளால் உறக்கமின்மை அனுபவிக்கிறார்கள்.9% பேர் தூக்கத் தடை (Sleep Apnea) போன்ற மருத்துவப் பிரச்சினைகளால் சரியாக உறங்க முடியவில்லை. 6% பேர் மொபைல் அழைப்புகள், மெசேஜ்கள் போன்றவை உறக்கத்தை பாதிக்கிறது என்று கூறியுள்ளனர்.

72% பேர் உறக்கத்தின்போது கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய அவசியம் அவர்களின் தூக்கத்தைக் குறைக்கிறது.

இது போன்ற காரணங்கள் இந்தியர்களின் உறக்கத்தினை பெரிதும் பாதிக்கிறது. LocalCircles நிறுவனர் சச்சின் தபாரியா கூறுகையில், “இந்தியர்களில் உறக்கக் குறைவு உலக அளவில் மிக அதிகம் காணப்படுவது ஆபத்தான நிலை” என்று எச்சரித்துள்ளார். “தூக்கக்குறைவு என்பது உயர் இரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம், உறுப்பு செயலிழப்பு, மன ஆரோக்கியக் குறைவு போன்ற ஆபத்துகளை ஏற்படுத்தும்” என அவர் தெரிவித்தார். இந்தியர்களின் தாமதமான இரவு உணவு பழக்கம் (இரவு 9 மணிக்குப் பிறகு உணவு உட்கொள்வது, வேலை நேரம் நீள்வது, போக்குவரத்து பிரச்சினை போன்றவை) உறக்கத்துக்கான நேரத்தைக் குறைக்கிறது. உறக்கத்தின் தரம் மற்றும் அளவினை மேம்படுத்துவதற்கு, இந்தப் பழக்கவழக்கங்கள் மாற்றப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.