நாட்டின் 76 ஆவது குடியரசு தின விழா டெல்லியில் உள்ள கர்தவ்யா பாதை என்ற பகுதியில் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முப்படைகளின் அணிவகுப்பு நடத்தப்பட்டதோடு, பல்வேறு மாநிலங்களில் அலங்கார ஊர்திகளும் இடம்பெற்றது. சுகோய், தேஜஸ், ரபேல் போன்ற விமானங்களில் வான் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதனால் பல்வேறு பகுதிகளில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வாகன சோதனைகள் நடத்தப்பட்டது பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் கொண்டு கண்காணிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் திரால் சவுக் பகுதியில் முதல்முறையாக இந்திய தேசிய கொடியில் பறக்க விடப்பட்டது. இதனை 3 தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஏற்றி வைத்தனர்.

இதுகுறித்து இந்திய ராணுவம் கூறியதாவது, முதியவர், இளைஞர் மற்றும் ஒரு குழந்தை ஆகியோர் இந்த கொடியை ஏற்றி வைத்தனர். தலைமுறைகளின் ஒற்றுமை மற்றும் தேசத்திற்கான பகிரப்பட்ட உள்ளார்ந்த ஈடுபாடு ஆகியவற்றை இது வெளிப்படுத்தி உள்ளது. இந்த செயல்முறை ஒளிரும் வருங்காலம் நோக்கிய கூட்டு பயணத்தில் வயது வேற்றுமையின்றி இந்திய மக்களுக்கு இடையான வலுவான பிணைப்பு சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் பக்சி  ஸ்டேடியத்தில் துணை முதலமைச்சர் சுரீந்தர் சவுத்ரி தேசியக்கொடியை ஏற்றினார். இந்த வாய்ப்பு வழங்கியதற்காக முதலமைச்சர் உமர் அப்துல்லாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.