
பழனியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தைப்பூச திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த திருவிழா அடுத்த மாதம் 11ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு ஏராளமான பக்தர்கள் பாதை யாத்திரையாக பழனிக்கு வருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதியை செய்து கொடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து அரசு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பாதயாத்திரையாக பக்தர்கள் நடந்து வரும் சாலைகளை சரி செய்தல், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்குதல், நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பாக பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மட்டும் அடிப்படை வசதியை செய்து கொடுக்க வேண்டும். இந்த திருவிழா அடுத்த மாதம் 5-ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். இந்த விழாவில் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் சிறப்பாக நடத்திக் கொடுக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அனைத்து துறை அதிகாரிகளையும் அமைச்சர் சேகர்பாபு கேட்டுக்கொண்டார்.
இதையடுத்த செய்தியாளர்களை சந்தித்த சேகர் பாபு கூறியதாவது, பழனி முருகன் கோவிலில் தைப்பூச நாள் மற்றும் அடுத்த 2 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. இதன் மூலம் பக்தர்கள் கட்டணம் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்யலாம். அதோடு பழனிக்கு வரும் பக்தர்களுக்கு நகரப்பகுதியில் இலவசமாக பேருந்து வசதிகள் செய்து கொடுக்கப்படும். இந்த திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அறநிலையத்துறை சார்பாக நாள்தோறும் 20 ஆயிரம் பக்தர்களுக்கு வீதம் 2 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படும்.