ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி மண் தொழிலாளர் 3-வது வீதியில் வெங்கடேசன்- சரஸ்வதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் சரஸ்வதி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பவானி கீரைகார வீதியில் வசிக்கும் சலீம்(37) என்பவர் ஈரோடு மாநகராட்சி இரண்டாவது மண்டலத்தில் வரி வசூல் மைய உதவியாளர் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் எனவும், 4 லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் வேலையை நான் உங்களுக்கு வாங்கி தருகிறேன் எனவும் சரஸ்வதியிடம் கூறியுள்ளார்.

இதனை நம்பி சரஸ்வதி அவர் கேட்ட பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் கூறியபடி சலீம் வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதற்கிடையில் சலீம் தலைமறைவாகிவிட்டார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சரஸ்வதி பவானி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சலீமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.