
போலந்து நாட்டைச் சேர்ந்தவர் கஜேதன் ஹப்னர். இவர் தனது பெண் தோழியுடன் துபாயில் வசிப்பதற்காக துபாய்க்கு சென்றுள்ளார். இதனால் கஜேதன் ஹப்னர் அப்பகுதியில் தங்குவதற்காக வாடகைக்கு வீடு தேடி வருகிறார். தற்போது துபாயில் மரினா என்ற பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அறை எடுத்து கஜேதன் ஹப்னர் தனது பெண் தோழியுடன் தங்கியுள்ளார். அவர்கள் இருவரும் அப்பகுதியை சுற்றி பார்க்க ஆசைப்பட்டனர். இதனால் வெளியில் செல்வதற்காக இ ஸ்கூட்டர் வாங்குவதாக முடிவு செய்தனர். இதனால் இணையதளத்தில் இதுகுறித்து தேடிவந்துள்ளனர். அப்போது தனியார் நிறுவனம் ஒன்றில் இ ஸ்கூட்டர் விற்பனை தெரியவந்தது. இதனால் கஜேதன் ஹப்னர் உடனே இ ஸ்கூட்டரை வாங்குவதற்காக ஆன்லைனில் பதிவு செய்தார்.
இந்த ஆன்லைன் பக்கத்தில் பொருள் வந்ததும் பணம் கொடுக்கும் ஆப்ஷனை தேர்வு செய்திருந்தார். இந்த இ ஸ்கூட்டரை கொடுப்பதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது மோசின் நசீர் என்ற ஆன்லைன் டெலிவரி ஊழியர் கஜேதன் ஹப்னர் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு சென்றுள்ளார். அந்த இ ஸ்கூட்டரை பெற்றுக் கொண்ட பின் கஜேதன் ஹப்னர் பணத்தை டெலிவரி ஊழியரிடம் கொடுத்துள்ளார். அப்போது கஜேதன் ஹப்னர் 1,750 திர்ஹாம்க்கு பதிலாக17,750 திரஹாம் தவறுதலாக கொடுத்துள்ளார். இதனை எண்ணி பார்க்காமல் டெலிவரி ஊழியர் கொண்டு சென்றுள்ளார். இரவு பணத்தை டெலிவரி ஊழியர் எண்ணிப் பார்த்தபோது 15,000 திர்ஹாம் அதிகமாக இருந்ததை அடுத்து தனது தாயிடம் கூறியுள்ளார். உடனே டெலிவரி ஊழியரின் தாயார் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு தனது மகனிடம் தெரிவித்துள்ளார்.
இதனிடையில் ஹோட்டலில் பணத்தை தொலைத்த கஜேதன் ஹப்னர் ஹோட்டல் அறை முழுதும் தீவிரமாகத் தேடி உள்ளார். இந்த நிலையில் ஹோட்டலுக்கு தொலைபேசி மூலம் டெலிவரி ஊழியர் முகமது மோசின் தொடர்பு கொண்டு கஜேதன் ஹப்னரிடம் நடந்த விபரங்களை கூறியுள்ளார். மறுநாள் காலை டெலிவரி ஊழியர் ஹோட்டலுக்கு சென்று பணத்தை திருப்பி கொடுத்துள்ளார். டெலிவரி ஊழியரின் நேர்மையை பாராட்டி கஜேதன் ஹப்னர் 300 திர்ஹாம் பரிசாக வழங்கியுள்ளார். இந்த சம்பவத்தை டெலிவரி ஊழியரின் அனுமதியோடு கஜேதன் ஹப்னர் தோழி தனது இணையதள பக்கத்தில் டெலிவரி ஊழியரை பெருமைப்படுத்தும் விதமாக தெரிவித்து இருந்தார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.