
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி வட்டம் தமிழ்நாடு பட்டாசு வணிகர் கூட்டமைப்பு நேற்று நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் மாநில செயலாளர் ராஜ சந்திரசேகரன் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, தமிழ்நாட்டில் உள்ள நிரந்தர பட்டாசு வியாபார கடைகளுக்கு உரிமங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் அரியலூர்,கடலூர், திருவள்ளூர் போன்ற சில மாவட்டங்களில் பட்டாசு விற்பனை உரிமங்கள் புதுப்பிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. உரிமங்கள் வழங்கப்படாத கடைகளுக்கு வெகு விரைவில் உரிமங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாசு வணிகர்கள் தீபாவளி வருவதால் விற்பனைக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஆன்லைனில் பட்டாசு விற்பனை நடந்து வருகிறது.
இதனால் நிரந்தர பட்டாசு வியாபாரிகளுக்கு அதிக நஷ்டங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றம் ஆன்லைனில் பட்டாசு விற்பனையை தடை விதித்துள்ளது. ஆனால் சிலர் தடையை மீறி ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்து வருகின்றனர். இதனை மாநில அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் மூலம் தரக்குறைவான பட்டாசுகளை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். கண்கவர் விளம்பரங்களின் மூலம் மக்களை ஏமாற்றி வருகின்றனர். 90% தள்ளுபடி எனக்கூறி தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்கின்றனர்.இதனால் பொதுமக்கள் விளம்பரங்களை நம்பி ஆன்லைனில் பட்டாசுகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
நேரடி விற்பனை கடைகளுக்கு சென்று பட்டாசுகளை வாங்கி தீபாவளியை மகிழ்ச்சியாக மற்றும் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் எனவும் மாநிலச் செயலாளர் ராஜ சந்திரசேகரன் வலியுறுத்தியுள்ளார். இந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பொதுச் செயலாளர் இளங்கோவன் மற்றும் மாநில துணைச் செயலாளர் பிரபாகரன் ஆகியோர் இருந்தனர்.