
அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அண்ணா பல்கலைக்கழக விவகாரத்திற்கு எதிராக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அவர் கூறியதாவது, அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கை சி.பி.ஐக்கு மாற்றம் செய்ய வேண்டும். தற்போது இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில் பத்திரிக்கையாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டு அவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். அண்ணா பல்கலைக்கழக மாணவியின் எஃப்.ஐ.ஆர் காப்பி வெளியானது முழுக்க முழுக்க அரசே காரணமாகும். ஆனால் பத்திரிக்கையாளர்களின் செல்போன்களை பறிமுதல் செய்ய வேண்டிய கட்டாயம் என்ன?. அரசின் தவறுகளை பத்திரிகையாளர்களின் மீது திசை திருப்ப முயல்வது அநியாயமாகும். உயர் நீதிமன்றம் நியமித்த விசாரணை அதிகாரிகள் என்றாலும் அவர்கள் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் என்பதால் திமுக அரசு இந்த வழக்கில் அதிக அழுத்தம் கொடுக்கிறது என சந்தேகம் தோன்றுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க வேண்டும், யார் அந்த சார்? என்ற கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டுமென்றால் மாநில அரசின் எந்தவித தலையிடும் இல்லாமல் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு கொண்டு வர வேண்டும். அப்போதே யார் அந்த சார்? என்ற கேள்விக்கு விடை தெரியும். எனவே இந்த வழக்கை உடனடியாக சி.பி.ஐக்கு மாற்ற வலியுறுத்துகிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.