
இஸ்ரேலின் வடகிழக்கு பகுதியை ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் லெபானன் மீது தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து காசாவை இலக்காக வைத்து இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 42,000 மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி நடந்த பேஜர் வெடிப்பில் ஹிஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்கள் கொல்லப்பட்டது குறித்து எந்தவித தகவலையும் இஸ்ரேல் வெளியிடவில்லை.
ஆனால் தற்போது இஸ்ரேலின் பிரதமர் நேதன்யாகூ அந்த பேஜர் வெடிப்புக்கு ஒப்புதல் வழங்கியது நான்தான் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதனால் ஹிஸ்புல்லா அமைப்பினர் தொடர்ந்து இஸ்ரேலின் வட கிழக்குப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் அதிவேகமாக ஏவுகணைகளை ஏவி தாறுமாறாக தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது ஹிஸ்புல்லா அமைப்பு. இந்த தாக்குதல் வடக்கு இஸ்ரேல் ஹய்பா பே பகுதியில் அடுத்தடுத்து 165 ராக்கெட்டுகளை ஏவியுள்ளது. இந்த தாக்குதலில் 1 வயது குழந்தை உட்பட 7 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
80 ராக்கெட்டுகளை இஸ்ரேல் ராணுவம் தடுத்ததாகவும் மீதி இருந்தவை வெளிப்பகுதியில் விழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தாக்குதலில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஹைபா பகுதியில் இதுவே இதுவரை நடந்த தாக்குதல்களில் மிகப்பெரிய தாக்குதல் ஆகும். மேலும் இஸ்ரேல் அரசு ஹிஸ்புல்லா அமைப்பு ஏவ பயன்படுத்திய லான்சர்களை ட்ரோன் மூலம் அழித்து விட்டதாக தகவல் வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து அடுத்தடுத்து தாக்குதலுக்கு தயார் நிலையில் உள்ளது.