ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனந்தராக் மாவட்டம் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை அடுத்து தீ ரெஸிஸ்ட் பிரண்ட் என்ற பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.

இச்சம்பவத்தை அடுத்து மத்திய அரசு இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற உத்தரவிட்டது. அந்த உத்தரவை அடுத்து இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தானியர்கள் பலர் தங்கள் நாட்டுக்கு செல்வதற்காக நேற்று வாகா எல்லையில் குவிந்தனர்.

அப்போது பாகிஸ்தானியர்களில் ஒருவரான அகமது என்பவர் கூறியதாவது, நாங்கள் இங்கு உள்ள எங்கள் உறவினர்களை பார்ப்பதற்காக கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி 45 நாட்கள் விசாவில் இந்தியாவிற்கு வந்தோம்.

பஹல்காம் தாக்குதல் யார் செய்திருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது தான்.  நாங்கள் இந்தியாவுடன் சகோதரத்துவத்தையும், நட்புறவையும் மட்டுமே விரும்புகிறோம். இங்கு வெறுப்பிற்கு இடமே இல்லை. அதை நாங்கள் விரும்பவும் இல்லை என தெரிவித்தார்.

மற்றொரு பாகிஸ்தானியரான முஸ்தபா கூறியதாவது, பஹல்காம் தாக்குதல் ஒருபோதும் நடந்திருக்கக்கூடாது. ஆனால் அதற்காக அனைத்து பாகிஸ்தானியர்களையும் இந்தியாவை விட்டு வெளியேற சொல்வது சரியான முடிவு அல்ல என தெரிவித்தார்.