ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சூரத் வங்கி ஊழியர் ஷைலேஷ்பாய் கல்தியாவுக்கு வியாழக்கிழமை சூரத்தில் அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் குஜராத் பாஜக தலைவர் மற்றும் மத்திய நீர் மின்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் கலந்து கொண்டார். இந்த நிலையில், பலவிதமான நெகிழ்ச்சியையும் கோபத்தையும் கலந்து கொண்ட சம்பவமாக ஷைலேஷ் கல்தியா மனைவியின் பேச்சு அமைந்தது.

அந்த சடங்கில் உருக்கமான பேச்சை நம்பிக்கையோடு பேசிய மனைவி, “எத்தனை விஐபிக்கள் உங்களைப் பாதுகாப்புடன் பின்தொடர்கிறார்கள்? வரி செலுத்துபவர்களின் உயிருக்கு மதிப்பே இல்லையா?” என மத்திய அமைச்சரிடம் நேரடியாகக் கேள்வி எழுப்பினார். “என் கணவன் உயிரிழந்ததால் என் வீட்டு தூண் விழுந்துவிட்டது.

 

என் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாக இருக்கும்?” என வலியுடன் கேட்ட அவர், “விஐபிக்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது, ஆனால் வரி செலுத்தும் சாதாரண மக்களுக்கு பாதுகாப்பே இல்லை. எனக்கு நீதி வேண்டும்” எனக் கூறினார். அவர் பேசும் போது சி.ஆர். பாட்டீல் மௌனமாக தலை குனிந்து கேட்டுக் கொண்டிருந்தார்.

ஏற்கனவே தனது 44வது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக மனைவி, மகள் மற்றும் மகனுடன் ஜம்மு காஷ்மீர் சென்றிருந்த ஷைலேஷ் கல்தியா, பயங்கரவாத தாக்குதலின் போது தன் குடும்பத்தினரின் கண் முன்னே சுட்டுக்கொல்லப்பட்டார். மொத்தம் 26 பேர் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். இதில் 25 பேர் சுற்றுலாப் பயணிகள் ஆவார்கள்.

சைலேஷ் கல்தியாவுடன் பாவ்நகரைச் சேர்ந்த ஒரு தந்தை-மகன் இரட்டையரும் இந்த பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கோபத்தையும், பாதுகாப்பு விதிகள் மீதான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.