பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த பின்னர், பாகிஸ்தானுடன் போர் செய்ய தேவையில்லை என தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் கருத்து பாகிஸ்தான் ஊடகங்களில் பரவலாக வெளியானது. இதனை தொடர்ந்து கர்நாடக பாஜக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் ஆர்.அசோக், பாகிஸ்தான் செய்தி தொலைக்காட்சியில் சித்தராமையாவின் உரை ஒளிபரப்பானதை தனது ‘X’ கணக்கில் பகிர்ந்தார். மேலும், சித்தராமையாவை “பாகிஸ்தான் ரத்னா” எனும் பெயரால் குறிப்பிடும் வகையில், “சின்ன குழந்தை போன்று, அவசியமற்ற மற்றும் மதிக்க முடியாத கருத்துகளை வெளியிட்டு, பாகிஸ்தானில் ஓர் இரவில் உலகப் புகழ் பெற்றுவிட்டீர்கள்,” என்று சாடினார்.

ஆர்.அசோக் மேலும், “எப்போதாவது பாகிஸ்தானுக்கு சென்றால், உங்களுக்கு ராஜ வரவேற்பு கிடைக்கும். மேலும், நீங்கள் பாகிஸ்தானுக்காக குரல் கொடுத்த அமைதித் தூதராக நினைத்து, ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ எனும் உயரிய விருதையும் வழங்கக் கூடும்,” என்று விமர்சித்தார்.

 

மாநிலம் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையை சந்தித்து வரும் இந்த தருணத்தில், முதல்வர் சித்தராமையா எதிரி நாட்டுக்கு துணையாக நடந்துக்கொள்வது நாட்டின் மிகப்பெரிய துரதிருஷ்டவசம் என்று ஆர்.அசோக் கடும் விமர்சனம் செய்தார்.

இந்த விவகாரத்தில் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசியபோது, “இப்போது பாகிஸ்தானுடன் போர் செய்ய தேவையில்லை. கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அமைதி நிலவ வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்,” என்றார்.

பஹல்காம் தாக்குதலில் பாதுகாப்பு மீறல் ஏற்பட்டது எனவும், மத்திய அரசு சரியான பாதுகாப்பை வழங்கத் தவறிவிட்டது எனவும் சித்தராமையா குற்றம்சாட்டினார். “பஹல்காம் என்பது சுற்றுலா பிரதேசம். அதே பகுதியில் புல்வாமா தாக்குதல் நடைபெற்றது என்பதை கருத்தில் கொண்டு அதிக கவனம் செலுத்த வேண்டியிருந்தது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானை சேர்ந்த மக்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவது குறித்து, “மத்திய அரசுடன் நாங்கள் ஒத்துழைப்போம். தகவல்களை வழங்கி நடவடிக்கை எடுப்போம்,” என தெரிவித்தார்.

மோடி மீது சித்தராமையா மேலும் குற்றம் சாட்டி, “பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நடந்த ஒற்றுமைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளவில்லை. தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்னிலை கொடுத்து மக்கள் நம்பிக்கையை ஏமாற்றுகிறார்கள்,” என்றும் கண்டனம் தெரிவித்தார்.