ஜம்மு காஷ்மீரில் முக்கிய சுற்றுலா தளமாக பகல்ஹாம் உள்ளது. அங்கு கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் மக்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கர்நாடக மாநிலம்,பெங்களூரு நேஷனல் சவுத் பகுதியில் அமைந்துள்ள சாலைகளில் திடீரென பாகிஸ்தான் கொடிகள் ஒட்டப்பட்டு இருந்தது. அதோடு அந்த கொடிகள் கிழித்து எறியப்பட்டிருந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு ஒட்டப்பட்டிருந்த கொடியை அகற்றினர். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் நடத்தி விசாரணையில் 6 பேர் வந்து சாலையில் அந்த கொடியை ஒட்டியதும், பின்னர் அந்த பகுதியைச் சேர்ந்த சில இஸ்லாமிய பெண்கள் அந்த கொடியை கிழித்ததும் தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை காவல்துறையினர் கைது செய்த நிலையில் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.