காஷ்மீர் மாநிலம் பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் 26 சுற்றுலா பயணிகளை சுட்டுக் கொன்றனர். ஒவ்வொரு சுற்றுலா பயணிகளையும் அவர்கள் இந்துவா? என்று விசாரித்து அறிந்த பிறகு துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதனால் பாகிஸ்தான் எல்லையில் போர் விமானங்களும், ராணுவ வீரர்களும் குவிந்துள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இந்திய பாகிஸ்தான் எல்லை பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.

அன்று இரவு பாகிஸ்தான் வீரர்கள் விதிகளை மீறி அத்துமீரலில் ஈடுபட்டு துப்பாக்கிசூடு நடத்தினர். இதனால் இந்திய ராணுவம் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தது. அதேபோன்று நேற்றும் 2-வது நாளாக எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தொடர்ந்து விதிகளை மீறி அத்துமீறலில் ஈடுபட்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்நிலையில் இந்தியா தரப்பில் பதிலடி தாக்கல் நடத்தப்பட்டது. பல இடங்களில் இந்திய ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடை தீவிரப்படுத்தினர்.

அதன் பிறகு பாகிஸ்தான் தங்களது நிலைக்கு பின்வாங்கினர். இந்த துப்பாக்கி சூடு விடிய விடிய நடந்ததாக கூறப்படுகிறது. இந்தியா தரப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று இந்த தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற பயத்தில் பாகிஸ்தான் எல்லை வீரர்கள் யூகத்தின் அடிப்படையில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் தரப்பில் இது தொடர்பாக கூறியதாவது தாங்கள் முழு அளவில் உஷார் படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.