ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த சிகாமணி என்பவர் அதிமுகவின் கவுன்சிலராக இருக்கிறார். இவர் ரியல் ஸ்டேட் தொழில் செய்து வரும் நிலையில் இவருடைய நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் கயல்விழி என்ற பெண் பள்ளி கட்டணம் செலுத்த முடியாத 9-ம் வகுப்பு மாணவியை சிகாமணிக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த மாணவியை சிகாமணி தனியார் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதேபோன்று பிரபாகரன், ராஜா முகமது போன்றோரும் மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து மாணவி தன் பெற்றோரிடம் கூற அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

அந்தப் புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கயல்விழி, அதிமுக கவுன்சிலர் சிகாமணி, பிரபாகரன் மற்றும் ராஜா முகமது,  உமா போன்றோரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பரமக்குடி மாணவி பாலியல் பலாத்கார வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மேலும் பரமக்குடியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியை தொடர்ச்சியாக பலர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மனவேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது என்றும், சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடுமையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதோடு இந்த கொடூர பாலியல் சம்பவத்திற்கு நகரத்தில் உள்ள சில முக்கிய புள்ளிகளுக்கும், காவல்துறையில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிய வருவதால் உடனே வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.