தாம்பரம் அருகே மணிமங்கலம் என்னும் பகுதியில் பாலகுமாரன் -வித்தியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆருத்ரா என்ற ஒரு பெண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை நேரத்தில் வித்தியா துணிகளை துவைத்து காய வைப்பதற்காக நான்காவது மாடிக்கு சென்றார். அப்போது அவர் தன் குழந்தையையும் தூக்கிச் சென்றார். அங்கு வித்தியா துணிகளை காய போட்டு கொண்டிருந்த நிலையில், குழந்தை படிக்கட்டில் நின்று விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது திடீரென படிக்கட்டில் உள்ள பக்கவாட்டு கம்பி வழியே தவறி குழந்தை கீழே விழுந்தது. இதில் அந்த குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் உடனடியாக குழந்தையை மீட்டு முடிச்சூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை வழங்கப்பட்ட நிலையில் பின்னர் மேல் சிகிச்சைக்காக குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.