
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் ஹர்தியால் சிங் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 9 வயதில் ஒரு மகன் இருக்கிறார்கள். இந்நிலையில் சம்பவ நாளில் ஹர்தியால் சிங் தன் மனைவியுடன் வயல்வெளிக்கு வேலைக்காக சென்று விட்டார். அப்போது அவர்களுடைய மகன் மட்டும் வீட்டில் நண்பர்களுடன் இருந்துள்ளார். அந்த சமயத்தில் சிறுவன் செல்போனில் கார்ட்டூன் வீடியோக்கள் பார்த்துள்ளான். ஆனால் செல்போனில் சார்ஜ் இல்லாததால் சார்ஜ் போட்டபடியே வீடியோ பார்த்துள்ளான். இந்நிலையில் திடீரென செல்போன் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதில் சிறுவனுக்கு கை, கால், தொடை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் அக்கம் பக்கத்தினர் அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்தனர். பின்னர் சிறுவனை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வரும் நிலையில் சிறுவன் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் செல்போன் சார்ஜ் போட்டபடி பார்ப்பதால் வெடித்து சிதறுவது தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகும் நிலையில் தற்போது சிறுவன் ஒருவன் இதனால் பாதிக்கப்பட்டுள்ளான். எனவே செல்போனை பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக பயன்படுத்துவதோடு சார்ஜ் போட்டபடி அதனை பயன்படுத்தக்கூடாது. மேலும் குழந்தைகளிடம் செல்போன் கொடுக்கும் போதும் பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.