திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள பகுதியில் 21 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள தேரடி வீதியில் உள்ள துணி கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்ற இளம்பெண், இரவு வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளுடன் வேலைக்கு செல்லும் பெண்களிடம் விசாரித்துள்ளனர். தனது மகளிடம் செல்போன் இல்லாததால் அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறினர். அப்போது அந்த பெண்கள் வேலை முடிந்து வெளியே வரும்போது டிபன் பாக்ஸை மறந்து விட்டதாக திரும்ப கடைக்குள் சென்றார், அதன் பிறகு நாங்கள் பார்க்கவில்லை என்று கூறினர். அதனால் பூட்டிய கடைக்குள் தனது மகள் சிக்கியிருக்கலாம் என சந்தேகமடைந்த பெற்றோர் கடை இருக்கும் பகுதிக்கு சென்றனர்.

அங்கிருந்த செக்யூரிட்டி மூலம் கடையின் உரிமையாளரிடம் தொடர்பு கொண்டு கடையை திறக்க முயற்சித்தனர், ஆனால் கடையை திறக்கவில்லை. எனவே இரவு  முழுவதும் கடைக்கு முன்பு பெற்றோர் பரிதவிப்புடன் காத்திருந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் நேற்று சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

நேற்று காலை வணக்கம் போல் கடை திறக்கப்பட்டது. அதன் பின் காவல்துறையினர் முன்னிலையில் துணி கடையை திறந்து பார்த்தனர். கடையின் அனைத்து தளங்களிலும் தேடினர். இருப்பினும் இளம்பெண்ணை  காணவில்லை. மேலும் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டபோது, நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு இளம்பெண் வெளியே செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. எனவே இளம்பெண் எங்கு சென்றார் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.