
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடிக்கு அடுத்து இந்து கல்லூரி ரயில் நிலையம் உள்ளது. இங்கு நேற்று மாலை சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில் நடைமேடையில் பயணிகள் வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக ரயிலை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் அந்த நடைமேடையில் 4 இளைஞர்கள் கையில் கட்டைகள், பிளாஸ்டிக் பைப் போன்ற பொருள்களை வைத்து அங்குள்ள இரும்பு கம்பிகளில், சுவர்களில் அடித்து கொண்டே தகாத முறையில் நடந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து அங்கு ரயிலுக்காக காத்திருந்த பயணிகள் மீதும் அந்த இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பயணி ஒருவர் பலத்த காயமடைந்தார். இதனால் பயணிகள் அனைவரும் பதறி அடித்துக் கொண்டு ஓடிள்ளனர். இது குறித்த அறிந்த ஆவடி ரயில்வே காவல்துறையினர் விரைந்து சென்று காயமடைந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தாக்குதல் நடத்திய 4 இளைஞர்களை தேடி அதில் 3 இளைஞர்களை தற்போது கைது செய்துள்ளனர்.
மேலும் இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் கஞ்சா போதையில் இவ்வாறு செய்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் ஒரு இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. ரயில் நிலையத்தில் கஞ்சா போதையில் இளைஞர்கள் நடந்து கொண்டது அனைத்தும் வீடியோவாக வெளியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.