
மும்பையில் சாண்டாக்ரூஸ் பகுதியில் வசிக்கும் 45 வயதான நபர் ஒருவர், சமூக வலைதளங்களில் “1 ரூபாய் நோட்டுக்கு ₹4.53 லட்சம் பரிசு” என்ற விளம்பரத்தை பார்த்து, அதில் கொடுக்கப்பட்ட வாட்ஸ்அப் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். தனது 1 ரூபாய் நோட்டின் புகைப்படத்தையும் அனுப்பினார்.
பின்னர் பங்கஜ் சிங் என்ற நபர், “நாணய விற்பனை நிலையத்தில் வேலை பார்க்கிறேன்” என கூறி, பதிவு கட்டணமாக ₹6,160 கோரினார். அதனைத் தொடர்ந்து மேலும் ₹6,107 மற்றும் பல கட்டங்களில் பணம் கோரப்பட்டு, மொத்தமாக ₹10.38 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர்.
மொத்தத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான தொகையை இழந்த பின், “₹6 லட்சம் கூடுதல் செலுத்தினால் பரிசுத்தொகை ₹25.56 லட்சமாக வரும்” என மேலும் கோரிய போது தான் அந்த நபர் இது மோசடி என்பதை கண்டுபிடித்து சைபர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தற்போது IT சட்டம் மற்றும் இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பங்கஜ் சிங் மற்றும் அருண் சர்மா எனும் மோசடியாளர்கள் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பறக்கும் இந்த வகை போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் என மக்கள் மீண்டும் மீண்டும் எச்சரிக்கப்படுகின்றனர். “பழைய நாணயம், நோட்டு பரிசுக்கு” போன்ற விளம்பரங்கள் பெரும்பாலும் மோசடிக்கே வழிவகுக்கின்றன என சைபர் காவல் துறை தெரிவித்துள்ளது.