
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கில்லியன் பேர் சிண்ட்ரோம் என்ற தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ஆக இருந்தது. இந்த நோய் தொற்றின் காரணமாக சோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் சமீபத்தில் புனே சென்றுள்ளார். அப்போது அவருக்கு இந்த நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரி கூறியதாவது, GBS எனப்படும் இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 26ல் 101 ஆக அதிகரித்தது. அவர்களில் 68 பேர் ஆண்கள் என்றும், 33 பேர் பெண்கள் என்றும் கூறப்படுகிறது. இவர்களில் 16 பேர் வென்டிலேட்டர் உதவியோடு உள்ளனர்.
ஒருவர் இந்த நோயால் உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம் என்று தெரிவித்தனர். அவருடைய வயது 40 என்றும், வயிற்றுப்போக்கு, சளி, இருமல் போன்ற பாதிப்புகள் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவர் தனது உடல்நல குறைவால் கடந்த 18ம் தேதி அன்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன் பின் அவரது உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதால் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இது குறித்து அவரது பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.