
புதுச்சேரி மாவட்டத்திலுள்ள அரியாங்குப்பம் பகுதியில் செட்டிகுளம் சாலையை ஒட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பத்து குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தற்போது சாலைகளை விரிவு படுத்தும் வகையில் சாலையோரங்களில் உள்ள வீடுகளை நில தன்னகப்படுத்துதல் மூலமாக வீடுகளை மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து சாலையோரங்களில் வசிப்பவர்களுக்கு வீடுகளை மாற்ற அரசு நோட்டீஸ் அளித்துள்ளது. இதனை அடுத்து சாலையோரத்தில் வசிக்கும் மக்கள் வேறு இடம் மாற்றித் தருமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அரிக்கன்மேடு பகுதிகளில் மாற்று இடங்கள் வழங்குவதாக தெரிவித்தார். ஆனால் பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடம் அருகிலேயே உள்ள கோவிலின் இடங்களை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை அடுத்து பத்து குடும்பங்களை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தாங்கள் கேட்ட இடங்களையே தங்களுக்கு மாற்றித் தருமாறு வித்தியாசமான முறையில் காலை 7 மணி அளவில் பெரிய சவக்குழி ஒன்றைத் தோண்டி அதற்குள் பெண்கள் இறங்கி தீக்குளித்துக் கொள்வதாக கூறி போராட்டம் நடத்தினர். இதுகுறித்து சப் கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த சப் கலெக்டர் அர்ஜூன்ராமகிருஷ்ணன், வருவாய் அதிகாரி அருண் அய்யாவு, தாசில்தார் குப்பன், எஸ்.பி., பக்தவச்சலம், போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோர் மக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் மக்கள் சமாதானத்திற்கு உட்படாமல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் போராட்டம் நடத்த அனுமதி இல்லை. போராட்டத்தை நிறுத்துமாறு காவல்துறைக்கு சப் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். உடனே பொதுமக்களில் சிலர் தங்கள் மேல் பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சித்தனர். உடனே காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு போராட்டத்தை நிறுத்த முயற்சி செய்தனர்.இதனால் அங்கு கலவரம் ஏற்பட்டது. போராட்டத்திற்கு முன் நின்ற ரகு என்பவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 14 பெண்கள் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.