கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்நிலையில் சிங்காநல்லூரில் வசிக்கும் பார்வதி என்பவர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார். அந்த மனுவில் மனநலம் பாதிக்கப்பட்ட தனது தம்பி மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என கூறியுள்ளார்.

இதேபோல் ஆட்டோ டிரைவரான மீனாட்சிசுந்தரம் அளித்த மனுவில், கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக நான் ஆட்டோ ஓட்டி வருகிறேன். இந்நிலையில் ஆட்டோ வாங்குவதற்காக தனியார் நிதி நிறுவனத்தில் 1 லட்சத்து 66 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினேன். இதுவரை வட்டியுடன் சேர்த்து 2 லட்சத்து 64 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளேன். ஆனால் இன்னும் அசலும், வட்டியும் செலுத்த வேண்டும் என கூறி சம்பந்தப்பட்டவர்கள் என்னை மிரட்டுகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.