கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு கொடுக்க பல்லடத்தை சேர்ந்த தனச்செல்வன், அவரது மனைவி பியூலா ஆகியோர் சென்றுள்ளனர். திடீரென பியூலா நுழைவு வாயில் முன்பு தான் கொண்டு வந்த டீசலை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க செய்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தனச்செல்வன் சென்னையில் இருக்கும் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாக வேலை பார்த்து விருப்ப ஓய்வு பெற்றார்.

கடந்த 4 ஆண்டுகளாக இவர்கள் பல்லடத்தில் வசித்து வருகின்றனர். இவர்களது மகனுக்கு தனியார் நிறுவனம் நடத்தி வரும் பிர்தோஷ் சலாஷூதீன் என்பவர் சென்னையில் உள்ள மருத்துவ கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி 23 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார். ஆனால் கூறியபடி எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி கொடுக்கவில்லை. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே கலெக்டர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.