சென்னையின் நெசப்பாக்கத்தைச் சேர்ந்த 58 வயதான கலையரசி, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மகளை சந்திக்க சென்றார். மகளை சந்தித்த பிறகு, அவர் மலேசியன் ஏர்லைன்ஸ் மூலம் கோலாலம்பூருக்கு பயணித்தார். அங்கு இருந்து, மற்றொரு மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த போது, சோகமாக அவரது உயிரிழப்பு நடந்துள்ளது.

விமானம் தரை இறங்கிய பிறகு, கலையரசி தனது இருக்கையில் தலை சாய்த்து தூங்குவது போல் இருந்தார். அனைத்து பயணிகளும் விமானத்திலிருந்து இறங்கிய பின்னர், விமான பணிப்பெண்கள் அவரை எழுப்ப முயன்ற போது, பதிலளிக்கவில்லை. இதனால், அவர்கள் விமான கேப்டனுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக, சென்னை விமான நிலைய மருத்துவ குழுவினர் விமானத்தில் ஏறி கலையரசியை பரிசோதித்த போது, அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிய வந்தது.

கலையரசி கடுமையான மாரடைப்பு காரணமாக தூக்கத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். அந்த நிலவரத்தில், சென்னை விமான நிலைய போலீசார் விரைந்து வந்தனர். கலையரசியின் சடலத்தை கைப்பற்றிய அவர்கள், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்த சம்பவதிற்க்கான காரணம் என்ன என்பதை போலீசார்கள் ஆராய்வதோடு, குடும்பத்தினர் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர். மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், பொதுவாக இரவு 11 மணிக்கு சென்னை வந்துவிட்டு, மீண்டும் 12 மணிக்கு கோலாலம்பூருக்கு புறப்பட்டு செல்லும். ஆனால், கலையரசி உயிரிழந்ததால், விமானம் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டு, 1 மணி நேரம் தாமதமாக அதிகாலை 1 மணிக்கு தனது பயணத்தை தொடர்ந்தது.