
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஊரில் உள்ள இந்த கோவில் ஏழுமலைகளால் சூழ்ந்துள்ளதால் திருப்பதி ஏழுமலையான் கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு பல்லாயிரம் கணக்கான மக்கள் நாள்தோறும் வருகை தருகின்றனர். எனவே திருப்பதி தேவஸ்தானம் முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் கூறப்பட்டுள்ளதாவது, பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் தங்களது உடல்நலம் கருதி அதனை மேற்கொள்ள வேண்டும். உடல் பருமன், இதய நோய், சுவாசக் கோளாறு உள்ள பக்தர்கள் தங்களது உடல் நலம் கருதி பாதயாத்திரை செல்வதை தவிர்க்க வேண்டும். திருப்பதி ஏழுமலையான் கோவில் கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்தில் இருப்பதால் மலைக்கு மேலே ஆக்ஸிஜனின் அளவு குறைவாக இருக்கும்.
எனவே பாதயாத்திரை மேற்கொள்பவர்கள் ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டவர் எனில் அவர்களது நிலைமை மிகவும் மோசமாகிவிடும். பாதயாத்திரை மேற்கொள்ளும் போது பக்தர்களுக்கு ஏதேனும் உடல்நலம் குறைபாடு ஏற்பட்டால் காளி கோவில் மற்றும் பாஷ்யகர்லா கோவில் அருகே மருத்துவ வசதி அமைக்கப்பட்டுள்ளது அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். திருப்பதியில் உள்ள அஸ்வினி மருத்துவமனையில் 24 மணி நேரம் மருத்துவ சேவை உள்ளது மற்றும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் சுவிம்ஸ் மருத்துவமனை மூலம் டயாலிசிஸ் வசதி உள்ளது அதனை பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு தேவஸ்தானம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.